தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அமைத்தது. இந்த குழுவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் முன்னாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எல்.ஏ எழிலன், முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை குழு இன்று (22-12-25) ஆலோசனையில் ஈடுபட்டது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன மாதிரியான வாக்குறுதிகள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக இந்த குழுவினர் முதன்முறையாக கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

ஆலோசனை நடைபெற்றப் பிறகு கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் அறிக்கை என்பது முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் என்பதி நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றிய அரசாங்கம் வேலைவாய்ப்புகளை மக்களிடம் இருந்து பறிப்பதையே வேலையாக இருக்கும் இந்த நேரத்தில் வேலைவாய்ப்புகள், மகளிர் உரிமைகள், பூமிப் பந்தை பாதுகாப்பது, விவசாயிகளின் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்” என்று கூறினார். 

Advertisment