Kanimozhi delivers a fiery speech at the DMK Youth Wing conference
தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, “இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும் பொழுது, உதயநிதிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்ல தோன்றவில்லை. வெற்றி நமது என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு மாநாட்டை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவரை பாராட்டவும், வாழ்த்தவும் தோன்றுகிறது. இது இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு. இதற்கு முன்னால் கோவையிலும் தஞ்சையிலும் மகளிர் அணிக்காக மண்டல மாநாடுகளை மிக வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறோம். நம்முடைய முதன்மை செயலாளர் தான் தஞ்சையில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி காட்டினார். இந்த இரண்டு மாநாட்டிலும், நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்கள் எல்லாம் தெளிவாக தெளிவுபட்டிருக்கும். பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று சில பேர் சந்தேகப்படுகிறார்கள். இளைஞர்கள் யாரோடு இருக்கிறார்கள் தெரியவில்லை என்று சில பேர் குழப்ப நினைக்கிறார்கள். இந்த இரண்டு மாநாட்டுக்கு பிறகு, பெண்கள் இளைஞர்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சரோடு தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தெளிவாக தெரியும். நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. எல்லாம் கை கோர்த்துக்கிட்டு மேடையில் ஏறினார்கள். பா.ஜ.க, அதிமுக தலைமையிலான கூட்டணி இல்லை, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி. அந்த கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பிரதமரோடு கைகோர்த்து நிற்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் டெல்லியிலே ஒரு பட்ஜெட் படிக்கப்பட்டது. அந்த பட்ஜெட் படிக்கப்படுவதற்கு முன்னால் நம்முடைய முதலமைச்சர் காலையில் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு செய்தியை போடுகிறார். தேர்தல் வருகிறது, அதற்காகவது இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஏதாவது தருவார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்லிருந்தார். ஆனால் அப்போது கூட தமிழ்நாட்டுக்கு அள்ளி இல்லை, கிள்ளி கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய பா.ஜ.கவோடு கைகோர்த்து நின்று கொண்டிருக்கக்கூடிய துரோக கூட்டணி.
ரயில்வே துறையில், மகாராஷ்டிராக்கு 24,000 கொடுக்கிறது, உத்தரப் பிரதேசம் 20,000 கோடி, மகாராஷ்டிராவுக்கு 24,000 கோடி, குஜராத்துக்கு 17,000 கோடி கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு 7,600 கோடிதான் கொடுக்கிறார்கள். இந்த துரோகத்தோடு கைகோர்த்து கொண்டுதான் ஒரு எதிரணி நமக்கு எதிராக உருவாகி இருக்கிறது. நம் பிள்ளைகளுக்காக நாங்கள் பலமுறை போய் நிதிக்காக போராடி இருக்கிறோம். ஆனால், நம் பிள்ளைகள் படிப்பதற்காக நான் இந்தியை திணிப்பேன் அதை ஏற்றுக்கொண்டால் தான் உங்களுக்கு நிதி கொடுப்போம் என்று ரூ.3,500 கோடிக்கு மேல் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு வரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருக்கக்கூடிய துரோக கூட்டத்தோடு அவர்கள் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் இருக்கக்கூடிய எத்தனையோ பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் 100 நாள் வேலையால் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். பேரை மட்டும் மாற்றவில்லை, அந்த திட்டத்தையே ஒழிக்க பா.ஜ.க நினைக்கிறது. ஒரு அராஜக கூட்டத்தோடு அவர்கள் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பெண்கள், சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த வேலை கூட இல்லாமல் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு கூட்டம் நமக்கு எதிராக அணி திரண்டு கொண்டிருக்கிறது. டிரம்ப்போடு பிரதமர் போட்டிருக்கும் ஒப்பந்தம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார்கள். ஊர் பக்க, நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி திங்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம், நீ உமி கொண்டு வா நான் அவல் கொண்டு வரேன் ஊதி ஊதி திங்கலாம், அந்த உமியை நம்முடைய இந்திய மக்களுடைய கண்களில் ஊதலாம் என்பது போல் இருக்கிறது. ஏனென்றால் நாம் அனுப்பக்கூடிய பொருளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் இருந்து வரக்கூடிய பொருளுக்கு வரியே கிடையாது.
அங்கே இருக்கும் விளைப் பொருட்கள் அங்கே இருக்கும் அந்த விவசாயிகள் விளைவிக்கக்கூடிய அமெரிக்க பொருட்கள் இங்கே கொண்டு வந்து சந்தைப்படுத்தப்படும். ஆனால் நம் விவசாயிகள் விளைக்கக்கூடிய எதுவும் அவர்களுக்கு ஈடாக இருக்காது. நம்முடைய விவசாயிகளின் எதிர்காலம் என்ன ஆவது?. ஆனால் இது எதற்கும் மோடி பதில் சொல்லமாட்டார். குடியரசுத் தலைவர் உரையில் வழக்கமாக பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த பிரதமர் வரவில்லை. இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆளான போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல பிரதமர் தயாராக இல்லை. அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுகிறது. பிரதமர் எல்லாரையும் நீக்கிட்டாவது பதில் சொல்லுவார் எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. நாடாளுமன்ற சரித்திரத்திலேயே முதல் முறையாக பிரதமர், குடியரசுத் தலைவருடைய உரைக்கு பதில் சொல்லாமல் நிறைவேற்றப்பட்டது முதல் முறையாக இந்த பா.ஜ.க ஆட்சியில் தான், நரேந்திர மோடியின் ஆட்சியில் தான். அவர், சாதாரன பிரதமர் இல்லை, நரேந்திர மோடி விஸ்வகுரு என்று அவரின் கட்சியால் போற்றப்படக்கூடிய ஒருவர். நான் கடவுளால் அனுப்பப்பட்டவன் என்னுடைய அம்மாவுக்கு மட்டும் பிறந்தவன் இல்லை நான் கடவுள் அனுப்பிய குழந்தை என்று அவரே சொல்கிறார். அப்படிப்பட்ட கடவுள் அனுப்பிய குழந்தை ஏன் நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லவில்லை தெரியுமா? எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்கள் அவரை அச்சுறுத்தி விடுவார்கள், எதிர்கட்சியில் இருக்கக்கூடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயந்து கொண்டு அவரை நான் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று அவை தலைவர் சொல்கிறார் என்றால் எப்படிப்பட்ட ஒரு அராஜக ஆட்சியின் கீழ் நாம் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதை எதிர்த்து கேள்வி கேட்டு ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய முதலமைச்சரை தவிர வேறு யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு உணர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஒபாமா அமெரிக்காவில் ஆட்சி பொறுப்பிற்கு வரும் முன்னால், ‘எஸ் யூ கேன்’ என்றார். இங்கே இருக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் கேட்கக்கூடும், எங்களால் இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியுமா என்று, ‘எஸ் யூ கேன்’. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்று கொண்டபோது அவரது வயது 47, கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டபோது அவரது வயது 44, பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய போது அவரது வயது 40, நாவலர் நெடுஞ்சழியனின் வயது 30, தலைவர் கலைஞருடைய வயது 25. நம்முடைய முதல்வர் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்று கொண்டபோது அவரது வயது 27. உங்களால் முடியும். உங்களை தவிர வேறு யாராலும் முடியாது. எஸ் யூ கேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us