Kanimozhi cricticized Narendra modi at dmk youth wing conference
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி பேசியதாவது, “விருதுநகரில் நடைபெறும் இளைஞரணியின் எழுச்சி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தும் இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். தலைவர் கலைஞர் நமது முதலமைச்சரைப் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டபோது, உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற அவரைப் பற்றிச் சொன்னார். அந்த உழைப்புக்கு சொந்தக்காரராக உறக்கம் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு தலைவராக இளைய தலைமுறைக்கு தன்னுடைய உழைப்பால் தான் வாழக்கூடிய அந்த உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற வாழ்க்கை முறையால் ஒரு உதாரணமாக முதலமைச்சர் இருக்கிறார். உழைப்பு மட்டுமில்லை, உறுதி என்றாலும் நான்தான், பாசிச சக்திகளை எதிர்க்க கூடிய உறுதிமிக்க தலைவன் நான்தான். Man of Steel from South India. தென் தமிழ்நாட்டின் எஃகு மனிதர் என்று எல்லோரும் பாராட்ட கூடிய, புகழக்கூடிய, நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்க கூடிய, நம்முடைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்.
இந்த மாநாட்டை ஒரு வெற்றி மாநாடாக அமைத்து காட்ட வேண்டும் என்று, இங்கிருந்து அகலாமல் அல்லும் பகலும் துயிலாது பாடுபட்டு இந்த மாநாட்டை முன்னெடுத்து நடத்தி இருக்கக்கூடிய மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தைப் பார்க்கும் போது, உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது. வெற்றியும் நமதே என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு மாநாட்டை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதால், அவரை மனமார்ந்து பாராட்டவும், வாழ்த்தவும் தோன்றுகிறது. இது இளைஞரணியின் இரண்டாவது மாநாடு. இதற்கு முன்னால், கோவையிலும், தஞ்சையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டையும் நாம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த இரண்டு மாநாடுகள் முடிந்த பிறகு, பலருக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாகப் போக்கப்பட்டிருக்கும். நான் உறுதியாகச் சொல்கிறேன், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் முதலமைச்சர் அவர்களோடு தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும், யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.
நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. எல்லோரும் கையை கோர்த்துக்கொண்டு மேடையில் ஏறுகிறார்கள். அது, அதிமுக தலைமையிலான கூட்டணி இல்லை, பாஜக தலைமையிலான கூட்டணிதான். அந்த கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் பிரதமருடன் கைகோர்த்து நிற்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு பட்ஜெட் படிக்கப்பட்டது. அந்த பட்ஜெட் படிப்பதற்கு முன், முதலமைச்சர் அவர்கள் காலை நேரத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ‘தேர்தல் வருகிறது; அதனால் இந்த பட்ஜெட்டில் ஏதாவது தருவார்கள் என்று நினைக்கிறேன்’ என்று. ஆனால் அப்போதும் தமிழ்நாட்டுக்கு அள்ளி இல்லை, கிள்ளி கூட கொடுக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய பாஜகவோடு கைகோர்த்து நிற்கும் துரோகக் கூட்டணியாகவே இது அமைந்துள்ளது. ரயில்வே திட்டங்களை எடுத்துக் கொண்டால், மகாராஷ்டிரத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய், உத்தரப் பிரதேசத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய், குஜராத்திற்கு 17 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் 7,600 கோடி ரூபாய்தான். இந்த துரோகத்தோடு கைகோர்த்துக் கொண்டே நமக்கு எதிரான ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. நானும், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பலமுறை டெல்லி சென்று நிதிக்காக போராடியிருக்கிறோம். நம்ம பிள்ளைகள் படிப்பதற்காக, அவர்கள் ஹிந்தியை தினிப்பேன், அதை ஏற்றுக்கொண்டால் தான் உங்களுக்கு நிதி கொடுப்போம் என்று, தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வர வேண்டிய 3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை நிறுத்தி வைத்திருக்கும் துரோகக் கூட்டணியோடு அதிமுக கைகோர்த்துக் கொண்டிருக்கிறது.
கிராமப்புற மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் பாஜக பெயரை மட்டும் மாற்றவில்லை, அந்தத் திட்டத்தையே ஒழிக்க முயல்கிறது. யாருக்கு வேலை கொடுக்க வேண்டும், யாருக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதையும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறும் அராஜகப் போக்கோடு அவர்கள் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல், சாதாரண மக்களுக்கு 100 நாள் வேலை கூட இல்லாமல் செய்துகொண்டு இருக்கக்கூடிய ஒரு கூட்டம் . நமக்கு எதிராக அனிதிரண்டு கொண்டு இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம் என்று பிரதமர் பெருமையாகச் சொல்கிறார். அந்த ஒப்பந்தம் எப்படி இருக்கிறது என்றால், “நீ உமி கொண்டு வா, நான் அவல் கொண்டு வருகிறேன்; இருவரும் ஊதி ஊதி திங்கலாம்.” என்ற நிலைதான். நாம் அனுப்பும் பொருட்களுக்கு 18 சதவீத வரி. ஆனால் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு வரியே இல்லை. இதனால் நம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் அவர்களோடு போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. நமது விவசாயிகளின் எதிர்காலம் என்னாவது? ஆனால், இது எதுக்கும் பதில் சொல்ல மாட்டார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு வழக்கமாக பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முறை பிரதமர் வரவில்லை. காரணம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது ‘நீங்கள் எங்கு இருந்தீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் சொல்ல பிரதமர் தயாராக இல்லை. இதன் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பிரதமர் அவர்கள் ஏதாவது வந்து பதில் சொல்லுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவைத் தலைவர், ‘பிரதமர் வரமாட்டார்; பதில் சொல்ல மாட்டார்’ என்று தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் பதில் சொல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி, பாஜக ஆட்சிதான், நரேந்திர மோடி ஆட்சிதான். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘விஷ்வகுரு’, சாதாரண பிரதமர் அல்ல நரேந்திர மோடி; விஷ்வகுரு என்று அவர்களும், அவர்களுடைய கட்சியும் போற்றிக் கொண்டிருக்கும் ஒருவர். அவரே சொல்கிறார், ‘நான் என் அம்மாவுக்கு மட்டும் பிறந்தவன் இல்லை; கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று. அப்படிப்பட்ட கடவுள் அனுப்பிய குழந்தை, நாடாளுமன்றத்தில் வந்து ஏன் பதில் சொல்லவில்லை தெரியுமா? எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய பெண்கள் அவரை அச்சுறுத்தி விடுவார்கள் என்ற பயத்தில், எதிர்க்கட்சியில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சி, ‘பிரதமர் வர வேண்டாம்’ என்று அவைத் தலைவர் சொல்லியதாக தெரிவிக்கப்படுகிறது என்றால், நாம் எப்படிப்பட்ட அராஜக ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை எதிர்த்து கேள்வி கேட்டு,ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர வேற யாரு இல்லை என்று தமிழ்நாடு உணர்ந்துகொண்டு இருக்கின்றது.
இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒபாமா அமெரிக்க ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர், ‘Yes, You Can’ என்றார். இளைஞர்கள் கேட்கலாம், எங்களால் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்று. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்டபோது அவரது வயது 47. தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டபோது அவரது வயது 44. பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது அவருக்கு வயது 40. நாவலர் நெடுஞ்செழியன் 30 வயதில் இருந்தார். தலைவர் கலைஞர் 25 வயதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டபோது 27 வயதில் இருந்தார். உங்களால் முடியும்; உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது, Yes, You Can” என்று பேசினார்.
Follow Us