Kangana Ranaut apologizes in court for Controversial comment on female farmer
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களைத்திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடு முழுவதிலிருந்தும் டெல்லியில் கடந்த 2020- 2021 ஆம் ஆண்டுகளில் தொடர் போராட்டத்தை நடத்தினர். அதன்படி, மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்த போராட்டத்தில் 73 வயது கொண்ட மஹிந்தர் கெளர் என்ற பெண் விவசாயியும் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மஹிந்தர் கெளர் குறித்து சமூக ஊடகத்தில், ‘100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் உட்கார்ந்து இருக்காங்க’ என்று ஒரு நபர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை, நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் ரீட்வீட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கங்கனா ரனாவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் கங்கனா ரனாவத்தை சரமாரியாக கன்னத்தில் தாக்கினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார் என்று அவருக்கு எதிராக விவசாயி மஹிந்த்ர கெளர் பஞ்சாப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் கங்கனா ரனாவத் ஆஜராகாமல் இருந்தார். மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாப் நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் நேற்று (27-10-25) ஆஜரானார். இந்த விசாரணையின் போது, மஹிந்தர் கெளரிடம் மன்னிப்பு கோருவதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து மஹிந்தர் கெளரின் வழக்கறிஞர் கூறுகையில், “கங்கனாவுக்கு சம்மன் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு உள்ளே வந்தார். இது ஜாமீன் எடுத்து ஜாமீன் பத்திரத்தை வழங்குவதற்காக இருந்தது. நீதிமன்றத்திற்குள், இது ஒரு தவறான புரிதல் காரணமாக புகார்தாரரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் இன்று, மஹிந்தர் கெளர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், அதற்கு பதிலாக அவரது கணவர் இருந்தார். இது அவரைப் பற்றியது மட்டுமல்ல, விவசாயிகளைப் பற்றியது; அவர்கள் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். எனவே, நீதிமன்றம் மஹிந்தரின் கணவரிடம் கேட்டபோது, ​​அவர் இந்த விஷயத்தை முடிவு செய்ய முடியாது” என்று கூறினார்.
அதே போல் கங்கனா ரனாவத் கூறுகையில், “இந்த வழக்கை நீங்கள் கூர்ந்து கவனித்தால், என் தரப்பில் இருந்து அசல் எதுவும் சேர்க்கப்படவில்லை. மீம்ஸாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ரீட்வீட் இருந்தது. நான் மகிந்தரின் கணவருடன் இதைப் பற்றி விவாதித்தேன். நாடு தழுவிய அளவில் பல போராட்டங்கள் நடந்தன, மேலும் ஒருவர் பொதுவான மீம்ஸில் கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறான புரிதலுக்கு நான் வருத்தம் தெரிவித்தேன்” என்று கூறினார்.
Follow Us