காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் பேக்கரி கடையில் புகுந்த மர்ம நபர்கள் முருகன் என்பவரைக் கடுமையாகத் தாக்கினர். அதன் பின்னர் இந்த வழக்கை வாலாஜாபாத் போலீசார் வன்கொடுமை சட்டத்திற்கு மாற்றம் செய்தனர். அதே சமயம் இந்த வழக்கில் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலரின் பெயரைச் சேர்க்காமல் வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவரும், இந்த வழக்கின் புகார்தாரருமான முருகன் காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு நீதிபதி செம்மல் அமர்வில் இன்று (08.09.2025) காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தை ஆஜர்படுத்த வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் காவல் கண்காணிப்பாளர் அலுவல் பணியாகச் சென்னை சென்றுள்ளார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாகக் காஞ்சிபுரம் நகரச் சட்ட ஒழுங்கு துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இன்று ஆஜரானார். இதனையடுத்து இந்த வழக்கில் காவலரைச் சேர்க்காத காரணத்திற்காக டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து வரும் 22ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். 

அதாவது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் நீதிமன்றத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் சக காவலர்கள் உதவியோடு நீதிமன்ற வாளாகத்தில் இருந்த காரில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தப்பியோடியதாக முதலில் கூறப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் போலீஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் கிளை சிறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கம் ஒன்றில், “கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தப்பியோடவில்லை. கழிவறைக்கு சென்றிருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.