காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் முன்னணி தீயணைப்பு வீரராகப் பணிபுரிந்து வருபவர் காமராஜ். சுமார் 22 ஆண்டுகளாக தீயணைப்புத் துறையில் பணி செய்யும் காமராஜ், பதவி உயர்வு பெற்று, தற்போது மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நான்கு முன்னணி தீயணைப்பு வீரர் பதவிகளில் ஒருவராக உயர் பொறுப்பில் உள்ளார்.
இந்த நிலையில், காமராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே மதுபோதையில் பணிக்கு வருவதும், அவ்வப்போது பிரச்சனைகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் மீது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி, பணியின்போது மது அருந்திவிட்டு வந்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காமராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு பணியிட மாற்றம் பெற்று பணி செய்து வந்தார். அவர் எப்போதுமே மதுபோதையில் பணிக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சனிக்கிழமை(2.8.2025) இரவு, மதுபோதையில் பணிக்கு வந்த காமராஜ், வழக்கம்போல் அங்கிருந்த சக பணியாளர்களைத் தரக்குறைவாகப் பேசி, அலப்பறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த பொதுமக்களும் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனை கைமீறிப் போக, இத்தகவல் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட துணை தீயணைப்புத் துறை அலுவலர் சங்கர், தீயணைப்புத் துறை வாகனம் மூலம் காமராஜை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மதுபோதையில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தீயணைப்பு நிலையத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர், அரசு சீருடையில் மது அருந்திவிட்டு அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம், பெரும் பேசுபொருளாகியுள்ளது.