தனியார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் பேசுகையில் ''பெரியாரைப் பற்றிச் சொல்லும் போது போட்டோ எடுப்பதற்கு பணம் கேட்பார் என்று சொல்வார்கள். எங்க அம்மாவிடம் பெரியாரிடம் போட்டோ எடுப்பதற்கு பணம் வேண்டும் எனக் கேட்காமல் சினிமாவுக்கு போவதாக பணம் கேட்டு வாங்கிக் கொண்டு போனேன். பெரியார் அவருடன் போட்டோ எடுத்தால் காசு கேட்பார். அப்பொழுது என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் சொல்வார்கள் 'மூன்று தலைமுறைக்கு சொத்து வைத்துக்கொண்டு சின்னப் பையனிடம் ஐந்து ரூபாய் வாங்குகிறார் இவர் எப்படி பெரியார் ஆவார்' என்று கேட்பார்கள். அவர் சேர்த்த சொத்து எல்லாம் எங்கே இருக்கு பாருங்கள். மூன்று தலைமுறைக்கல்ல ஏழு தலைமுறைக்கு யூஸ் ஆகி கொண்டு இருக்கிறது. 

Advertisment

எப்படி பெயிலியர் கேவலம் இல்லை என்று சொன்னேனோ அதேபோல சிக்கனம் ஒன்றும் கெடுதல் இல்லை. பிச்சைக்காரனுக்கு 10 பைசா போட்டுவிட்டு சொர்க்கம் தேடுகிறீர்கள் பாருங்களே அதுதான் கேவலம். நீ சொர்க்கத்தையும் மதிக்கவில்லை. பத்து பைசாவிற்கு சொர்க்கம் கிடைத்து விடும் என நம்புகிறாய். இப்பொழுது கூட 'விளக்கு ஏத்துவீங்களா?' எனக் கேட்டார்கள். இது அறிவொளி ஏத்தியே ஆக வேண்டும். விளக்கு ஏற்றும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஏற்றுபவர்கள் ஏற்றட்டும் நான் தூண்டி விடுகிறேன். அதைத்தான் பண்ணினேன்.

அப்பொழுது வைரமுத்து எழுதிய வரிகள் தான் ஞாபகம் வந்தது 'ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்; நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்'. அதுதான் என்னைக் கேட்டார்கள் 'விளக்கு ஏற்றுவீர்களா? இல்லையா?' என்று. ஏற்றுகிறேன் சார் என்று சொன்னேன். அன்பு வணங்கியாக வேண்டும். அறிவு வணங்கியாக  வேண்டும். புரிகிறதா? நாங்கள் நாத்திகக்காரர்கள் அல்ல பகுத்தறிவுவாதிகள். நாத்திகம் என்பது ஆத்திகர் கொடுத்த பெயர். அதுவும் மதமாக மாற வாய்ப்புண்டு. ஆனால் பகுத்தறிவு அப்படியல்ல. அறிவே அப்படி அல்ல. வாஷும் பண்ணலாம் வளரவும் விடலாம். நான் வரும்பொழுது ஒரு பக்கம் சந்தனமும் சக்கரையும் இருந்தது. இந்த பக்கம் மண்ணும் செடியும் இருந்தது. செடிதான் முக்கியமான பாதை. சந்தன மரம் வளர்ப்போம் வாசனைக்காக அல்ல. அது காடு. அதுதான் இயற்கை விவசாயம்''என்றார்.