மறைந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (04-01-25) சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஏவிஎம் சரவணனின் நினைவு படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்று ஏவிஎம் சரவணனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன், “ஏவிஎம் சரவணனுடனான என் நட்பு 65 ஆண்டுகாலம் கடந்தது. ஒவ்வொருத்தரும் ஏவிஎம் சரவணனை பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவுக்கு பர்சனல் அனுபவங்கள் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய சுமையை தாங்கிக் கொண்டிருந்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. சின்ன குழந்தையாக நான் அங்கே போனேன். படத்துக்கு வைத்த டைட்டில் எல்லாமே ஒரு குழந்தையை கொஞ்சுகிற மாதிரி தான் எனக்கு வைத்திருக்கிறார்கள். எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ நல்ல குணங்கள் எல்லாம் வர வேண்டும் என்று அவர்கள் நினைப்பதை எல்லாம் என் படத்துக்கு டைட்டிலா வைத்துவிடுவார்கள். அவருக்கு எந்தெந்த விஷயங்கள் பொருந்துமோ அதெல்லாம் எனக்கும் பொருந்தும். அவரும் சகலகலா வல்லவர் தான். தனக்கு இருக்கிற புகழை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பார்.
ஏவிஎம் சரவணன் ஒரு முதலாளி என்பது எனக்கு புரியவே பல ஆண்டுகள் ஆனது. ஏவிஎம் குடும்பம் என்று சொல்லும் அவர்களுடன் ஒட்டிக்கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இங்கு வந்திருப்பவர்கள் எல்லோருமே சம்பிரதாயத்திற்காக வரவில்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் அவர்கள் எல்லோருமே அன்பிற்காகவும், மரியாதைக்காகவும் வந்தவர்கள். ஏவிஎம் இன்ஸ்டிடியூஷனில் நான் படித்தேன் என்பதில் எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள் தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏவிஎம் பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள், நான் தவறு செய்யும்போது சத்தமாக சொல்லாமல் நான் நல்லது செய்யும் பொழுதெல்லாம் என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் சரவணன் சார் ” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/kamalavm-2026-01-04-14-19-39.jpg)