விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருமாவளவனுக்கு தங்க முலாம் பூசிய ஒரு கிலோ வெள்ளிச் சங்கிலியைப் பரிசாக வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், “சாதியே எனது முதல் எதிரி. இனி உட்கார வேண்டும், இல்லையெனில் நடக்க வேண்டும். முட்டிக்கு மட்டும் வேலை கொடுக்கக் கூடாது. அது தரையில் படுவதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல; உள்ளங்கால் தான் தரையில் படுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எனது நெடுநாள் கோபம். பிறப்பினால் நாம் எவருக்கும் தாழ்ந்தவரல்ல. என்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்பதை உங்கள் மனதில் புரியவைப்பதே இமயமலைச் சாதனை. அதில் ஏரி நின்று கூவி விளிக்கும் டென்சிங் தான் திருமாவளவன்.
திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானதல்ல. சாதிப் பிரிவினைகளே இந்தியாவின் பலவீனம். சாதியத் தடைகள் நீக்கப்பட்ட பின்பே நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது எளிதல்ல. அப்படி அரசியல் மயப்படுத்துபவர்கள் அனைவருமே ஆச்சரியத்துக்குரியவர்கள்; அற்புதமான மனிதர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். எனவே, திருமாவளவனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ‘அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா?’ எனக் கேட்டால், திருமாவளவன் அரசியலையே தேர்ந்தெடுக்கிறார். அவரைக் கண்டு நான் வியக்கிறேன். கட்சியை வளர்ப்பது எத்தனை கஷ்டம் என்பது கட்சி ஆரம்பித்த எனக்குத் தெரியும். ஆனால், அவர் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்துவிட்டார்.
பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும். மக்கள் நீதி மய்யத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம்; ஆனால், நாங்கள் அதைச் செயல்படுத்தவில்லை. எனது சகோதரர் அதைச் செயல்படுத்தினார். அதை நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/17/3-2025-08-17-11-24-57.jpg)