மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “நான் ஒன்னும், மார்க்கெட் போனதற்கு பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை, படைக்கலனோட வந்திருக்கிறோம். பவர்ஃபுல் ஃபோர்ஸோட, மாபெரும் மக்கள் படையோடு எல்லாவற்றுக்கும் தயாராகி தான் வந்திருக்கிறோம். இவ்வளவு தயாராக அரசியலுக்கு வருவதற்கு ஒரே ஒரு காரணம், நன்றிக்கடன் தான். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் நீங்கள் என்னுடன் நிற்கிறீர்கள், எனக்காக நிற்கிறீர்கள். வேறு யாரை விடவும் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். நம்மை பார்த்து தான் நம்முடைய எதிரிகளுக்கு பற்றி எரிகிறது.

Advertisment

வாழ்நாள் முழுக்க நம்முடைய மக்களுக்காக ஆதரவாகவும் துணையாகவும் நிற்பதை தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை, எனக்கு இப்ப வேறு வேலையும் இல்லை. இது தான் என்னுடைய வேலையே. என் கடன், என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே. அரசியல் செய்பவன், சினிமாகாரானா அவனா, இவனா என்பதை தாண்டி அவன் உண்மையானவனாக இருக்கிறானா என்பதை தான் பார்க்க வேண்டும். அம்பேத்கரையும், காமராஜரையும் தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி. இப்படி நல்ல நல்ல தலைவர்களையும் எதிர்த்து நின்று தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி. அதனால் எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது, எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது” என்று கூறினார். மார்க்கெட் போனதற்கு பிறகு அரசியலுக்கு வரவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை மறைமுகமாக விஜய் விமர்சித்து பேசியிருப்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு என்ன கருத்து சொல்வது?. என் பேர் சொல்லி இருக்கிறாரா?. யார் பேராவது சொல்லி சொல்லிருக்கிறாரா?. அப்பறம் ஏன்?. அட்ரஸ் ஏதாவது
 லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் தம்பி எனக்கு” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துச் சென்றார்.