தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று (08.08.2025) காலை 10. 45 மணியளவில் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அதனைத் துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அதாவது மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையானது உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாகப் பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், ‘3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்’ எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கோவி செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த மாநில கல்விக் கொள்கைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக்  கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை. ‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும்தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.