நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த, தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு நாய் பிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “உலக வரலாறு தெரிந்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் யாராவது கழுதைகளின் நிலை குறித்து கவலைப்படுகிறார்களா? கழுதைகள் நமக்காக பல சுமைகளைச் சுமந்தவை. ஆனால், இப்போது கழுதைகளைப் பார்க்கவே முடிவதில்லை. யாராவது கழுதைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா? என் கருத்துப்படி, எல்லா உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.