உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் இருமல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், பா.ம.க நிறுவனர் ராமதாஸும் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்பல்லோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று ஆஞ்சியோ செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்த தலைவர்களான வைகோ மற்றும் ராமதாஸை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று இருவரையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (07-10-25) அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று வைகோ மற்றும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமதாஸை விசாரிக்க வந்தேன். விசாரிப்பதற்கு முன்பாகவே அவரை இன்று மாலை டிஸ்ஜார்ஜ் செய்யப்போவதாக நல்ல செய்தி வந்தது. வைகோவும் ஓய்வு எடுத்துகொண்டு இருக்கிறார். இருவரும் நலமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இதையடுத்து கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “தினமும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அந்த சம்பவம் சோகம் தான். அதனால் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலேயே அந்த சோகம் போய்விடாது. இனிமேல், நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிச் சென்றார்.