தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் ஹாசன், கடந்த 2018ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். இடதுசாரியாகவும் இல்லாமல் வலதுசாரியாகவும் இல்லாமல் மய்யத்தில் நிற்பதாகக் கூறி முதல் முதலாக 2019 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார். அந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

Advertisment

அந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கமல்ஹாசன் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், திமுக மற்றும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் டிவி மீது கோபத்தோடு ரிமோட்டை தூக்கி எறிந்திருப்பார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவியது. ஆனால், அந்த தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. அதன் பின்னர், திமுக, அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சியோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றி பெறவில்லை. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.

அதனை தொடர்ந்து, திமுக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த கமல் ஹாசன், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்து கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு அவர் ஆதரவளித்தார். அதன் பிரதிபலனாக, திமுகவின் ஆதரவோடு கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

Advertisment

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் திமுகவை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட்டை எறிந்தது குறித்து கமல் ஹாசன் கூறியுள்ளார். பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல் ஹாசன், “எதற்காக நீங்கள் திமுகவுடன் சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட்டை தூக்கி போட்டீங்களே, ஏன் அங்கே மறுபடியும் போனீங்க என்று கேட்கிறார்கள். ஆமாம் ரிமோட்டை தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனால், ரிமோட்டை வேற ஆளு தூக்கிட்டு ஓடிட்டான். ரிமோட் அங்கே போகக்கூடாது. ரிமோட் மாநிலத்தோடு இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும் என்று நினைக்கிறோம், ரிமோட்டை கொடுப்போமா.. அந்த ரிமோட்டை எடுத்துட்டு வா, ஒளிச்சாவது வைப்போம். இனிமேல், ஒருத்தர் மேல் ஒருத்தர் அடிச்சிக்க வேணாம். எவனாவது வந்து தூக்கிட்டு போயிறுவான். அப்படின்னு எடுத்த முடிவு தான் அது. அந்த கூட்டணி புரிந்தால், புரிஞ்சுகோங்க, புரியலனா சும்மா இருங்க” என்று கூறினார்.