இந்தியா முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை மறுநாள் (15-08-25) 79வது சுதந்திர விழா கொண்டாடப்படுகிறாது.

Advertisment

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நகராட்சி ஒன்று உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி நகராட்சி (KDMC) வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மற்றும் உரிமம் பெற்ற ஆடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் மற்றும் பெரிய விலங்குகளை கசாப்பு செய்பவர்களின் கடைகளும் ஆகஸ்ட் 14 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வரை 24 மணி நேரம் மூடப்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் விலங்கு படுகொலை செய்யப்பட்டாலோ அல்லது இறைச்சி விற்கப்பட்டாலோ, மகாராஷ்டிரா நகராட்சிச் சட்டம் 1949இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

நகராட்சியின் இந்த உத்தரவு, அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நகராட்சியின் துணை ஆணையர் யோகேஷ் கோட்சே கூறுகையில், “ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால் அதை சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த உத்தரவு புதிதல்ல, குடியரசு தினத்தன்றும் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

இருப்பினும் நகராட்சியின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், “சுதந்திர தினத்தன்று என்ன சாப்பிடுகிறோம் என்பது எங்களது உரிமை, எங்களது சுதந்திரம். சைவம் சாப்பிடலாமா அல்லது அசைவம் சாப்பிடலாமா என்று அவர்களால் சொல்ல முடியாது. எங்கள் வீட்டில் நவராத்திரியில் கூட, எங்கள் பிரசாதத்தில் இறால், மீன் இருக்கும். ஏனென்றால் இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் இந்து மதம். இது மதம் சார்ந்த விஷயம் அல்ல, தேசிய நலன் சார்ந்த விஷயம். மக்களின் உணவுத் தேர்வுகளை ஆணையிட்டதற்காக கே.டி.எம்.சி ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும். அசைவம் சாப்பிடலாமா வேண்டாமா என்று மக்களுக்கு சொல்ல ஆணையர் யார்? நாங்கள் நிச்சயமாக அசைவம் சாப்பிடுவோம்” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் அங்கு பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது.