மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நட்சத்திரப் பேச்சாளருமான மஹுவா மொய்த்ரா கடந்த மே 3 ஆம் தேதி ஜெர்மனியில் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை திருமணம் செய்தார். மஹுவா மொய்த்ராவுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நபரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஜெய் ஆனந்த் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி அந்த உறவையும் துண்டித்துவிட்டார். இந்த நிலையில், 50 வயதான மஹுவா மொய்த்ரா கடந்த மே 3 ஆம் தேதி ஜெர்மனியில் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை திருமணம் செய்தார். திருமண உடையில் இருவரும் கைகோர்த்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த சூழ்நிலையில் மஹுவா மொய்த்ராவின் திருமணம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி கடந்த ஜூன் மாதம் கடுமையாக விமர்சித்து பேசினார். கொல்கத்தா சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பேசிய கல்யாண் பானர்ஜி, “மஹுவா தன் தேனிலவுக்குப் பிறகு இந்தியா திரும்பி வந்து என்னுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டார். அவர் என்னைப் பெண்ணுக்கு எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார். அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயதுடைய ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் அந்த பெண்ணை காயப்படுத்தவில்லையா?. நெறிமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி எனக்கு உபதேசம் செய்கிறார். அவர் தான் மிகவும் பெண்களுக்கு எதிரானவர். தனது எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாப்பது, எப்படி பணம் சம்பாதிப்பது மட்டுமே அவருக்குத் தெரியும்” எனப் பேசினார். ஏற்கெனவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் கல்யாண் பானர்ஜியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பினாகி மிஸ்ராவுடனான திருமணம் குறித்து கல்யாண் பானர்ஜியின் கருத்து குறித்து மஹுவா மொய்த்ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மஹுவா, “நீங்கள் பன்றியுடன் மல்யுத்தம் செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் பன்றி அதை விரும்பும் நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள். இந்தியாவில் ஆழ்ந்த பெண் வெறுப்பு, பாலியல் விரக்தி, ஒழுக்கக்கேட்டான ஆண்கள் உள்ளனர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் உள்ளது.” என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, தனது சக எம்.பி கல்யாண் பானர்ஜியை மறைமுகமாக பன்றி என்று குறிப்பிட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில், “சமீபத்தில் ஒரு பொது பேட்டியில் மஹுவா மொய்த்ரா தெரிவித்த தனிப்பட்ட கருத்துக்களை நான் கவனித்தேன். சக எம்.பி.யை பன்றியுடன் ஒப்பிடுவது போன்ற மனிதத்தன்மையற்ற மொழியைப் பயன்படுத்துவது உட்பட, அவரது வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானது. அதுமட்டுமல்லாமல் குடிமைச் சொற்பொழிவின் அடிப்படை விதிமுறைகளை மீறும் செயலாகும். பழிவாங்குதல் என்பது பொருளுக்குப் பதிலாக இருக்கும் என்று நினைப்பவர்கள், அவர்கள் எந்த வகையான அரசியலை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். நான் பேசியது பொது பொறுப்புக்கூறல் மற்றும் தனிப்பட்ட நடத்தை பற்றிய கேள்விகள் தான். இதை ஆணோ பெண்ணோ ஒவ்வொரு பொது நபரும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அந்த உண்மைகள் சிரமமாகவோ அல்லது சங்கடமாகவோ இருந்தால், அந்த விமர்சனத்தை பெண் வெறுப்பு என்று முத்திரை குத்துவதை நியாயப்படுத்த முடியாது.
ஒரு ஆண் சக ஊழியரை பாலியல் ரீதியாக விரக்தியடைந்தவர் என்று முத்திரை குத்துவது துணிச்சல் அல்ல, அது வெளிப்படையான துஷ்பிரயோகம். அத்தகைய பேச்சு ஒரு பெண்ணை நோக்கி எழுந்தால் நாடு தழுவிய சீற்றம் ஏற்படும், அது சரியாகவே இருக்கும். ஆனால் ஒரு ஆண் இலக்காக இருக்கும்போது, அது நிராகரிக்கப்படுகிறது, பாராட்டப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் இலக்காக இருக்கும்போது, அது நிராகரிக்கப்படுகிறது அல்லது பாராட்டப்படுகிறது. துஷ்பிரயோகம் என்பது துஷ்பிரயோகம் தான். இதில் பாலினம் காட்டக்கூடாது. கட்சி எம்.பி.க்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மெய்நிகர் கூட்டத்தின் போது கூறியது போல், மக்களவையில் கட்சியின் தலைமை கொறடா பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். எனவே பழி என் மீதுதான். எனவே, நான் பதவி விலக முடிவு செய்துள்ளேன்” என அதிரடியாக அறிவித்தார். மஹுவா மொய்த்ரா தன்னை பன்றி என்று அழைத்ததை அடுத்து தலைமை கொறடா பதவியை கல்யாண் பானர்ஜி ராஜினாமா செய்திருந்தது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கல்யாண் பானர்ஜி ராஜினாமா செய்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக ககோலி கோஷ் தஸ்திதர் எம்.பியை புதிய தலைமை கொறடாவாக கட்சித் தலைமை நியமித்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, கட்சித் தலைமை கல்யாண் பானர்ஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும், மக்களவையில் புதிய தலைமை கொறடாவாக ககோலி கோஷ் தஸ்திதரை நியமித்துள்ளதாகவும், சதாப்தி ராய் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவையில் கட்சியின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.