கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மன்னூர்பேட்டை கிராமம். இங்குத் தென் பெண்ணை ஆறு ஓடுகிறது. இத்தகைய சூழலில் தான் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் எத்திராஜ் என்பவர் இன்று (12.10.2025) காலை தனது நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் காலை 10 மணி அளவில் தென் பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அதன்படி எத்திராஜ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வந்த அதிகப்படியான நீர்ப்பெருக்கில் சிக்கிய எத்திராஜ் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காணாமல் போன மாணவன் எத்திராஜைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு திருக்கோவிலூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளி மாணவன் எத்திராஜ் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து உடற்கூறாய்வுக்கு மாணவன் எத்திராஜ் உடலானது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.