தென்கிழக்கு டெல்லியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கல்காஜி காளி கோயில். இந்தக் கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக யோகேந்திர சிங் என்பவர் சேவகராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 29-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, 30 வயதான ஆதுல் பாண்டே தனது நண்பர்களுடன் கல்காஜி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார்.

Advertisment

அப்போது, தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்த ஆதுல் பாண்டே, கோயில் சேவகரிடம் பரிவட்டம் மற்றும் கோயில் உணவு பிரசாதம் கேட்டுள்ளார். ஆனால், இரவு 9:30 மணியானதால், உணவு பிரசாதம் தீர்ந்துவிட்டதாகக் கூறிய சேவகர், பரிவட்டம் கட்டவும் மறுத்திருக்கிறார். இதனால், கோபமடைந்த ஆதுல் பாண்டே கோயில் சேவகரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் இரு தரப்பினரையும் விலக்கி சமாதானம் செய்துள்ளனர்.

Advertisment

ஆனால், கோபம் அடங்காத ஆதுல் பாண்டே கோயிலுக்கு வெளியே தனது நண்பர்களுடன் காத்திருந்தார். பின்னர், சேவகர் வெளியே வந்ததும், அந்தக் கும்பல் அவரை உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது. ஆத்திரம் தணியும் வரை வெறித்தனமாகத் தாக்கிவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள் சம்பவம் குறித்து தென்கிழக்கு டெல்லி காவல்துறைக்குத் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேவகர் யோகேந்திர சிங்கை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்டமாக சம்பவத்திற்கு முக்கிய காரணமான ஆதுல் பாண்டேயைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையே, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் ஆதுல் பாண்டே தனது நண்பர்களுடன் கோயில் சேவகர் யோகேந்திர சிங்கை கடுமையாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பக்தர்கள், கோயில் சேவகரைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கோயிலில் பரிவட்டம் மற்றும் பிரசாதம் வழங்காததால் சேவகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.