திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2025) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் கலைஞர் நினைவு நாளை குறிப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று. சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப் போற்றுகிறேன்' என தெரிவித்துள்ளார்.