திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2025) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் அங்கிருந்து 1.8 கிலோ மீட்டர் தொலைவிற்குப் பேரணியாக அண்ணாசாலை வழியாகச் சென்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். மெரினாவில் இருக்கக்கூடிய நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். கலைஞரின் நினைவிடத்தின் முகப்பு பகுதியில் பெரிய அளவில் நுழைவாயில் அமைக்கப்பட்டு அதில் கலைஞரின் சிலை, மூக்குக் கண்ணாடி மற்றும் பேனா ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மரியாதை தூவி செலுத்தினார்.