தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். அதே சமயம் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
மற்றொருபுறம் டி.டி.வி. தினகரனின் அமமுக, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி கொண்டன. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால்,சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி வரலாம்; சேரலாம். இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம். ஆனால் மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி தேர்தல் களத்தில் மக்களைச் சந்திப்பதற்கு வந்த இயக்கம் அதிமுக” எனப் பேசினார். கடம்பூர் ராஜுவின் இந்தப் பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.