தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அவற்றை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சூழலில், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தடுக்க, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திஸாநாயக்க, “கச்சத்தீவு எங்களுடைய சொந்த பூமி; அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் சென்ற இலங்கை அதிபர் அனுரா குமார, அங்கு மயிலிட்டித் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, திடீரென மாலை நேரத்தில் நான்கு ரோந்து படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்றார். அங்கு உள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடி, தீவைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர், இலங்கைக் கடற்படைக் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
யாழ்ப்பாணத்தில் பேசிய அவர், “கச்சத்தீவை மையமாகக் கொண்டு ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தத் தீவு, கடல், வானம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவை எங்கள் மக்களுக்கு சொந்தமானவை. இவற்றை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதிகாரத்தின் மூலம் அடிமைப்படுத்தவும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டில் எந்த மொழி பேசினாலும், எந்தக் கலாசாரத்தில் வாழ்ந்தாலும், எங்கு பிறந்தாலும், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு,” என்று தெரிவித்தார். இது தற்போது தமிழகத்தில் பேரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.