முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Advertisment

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக  மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.      

Advertisment

இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை  மேற்கொண்டார்.  இந்த ஆலோசனையின் போது செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1975ஆம் ஆண்டு  கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் நான் பங்கேற்றேன். அந்த பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன் நான். அதிமுக என்ற கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு 2 முறை வந்தபோதும் அந்த வாய்ப்புகளைக் கூட விட்டுக் கொடுத்தேன்.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் கொடுத்து ஒப்புதல் பெற்றவன் நான். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ஆம் தேதி மனம் திறந்து பேசினேன்.தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்” எனப் பேசினார். மேலும் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பின் முக்கிய ஆடியோ ஒன்றை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு ஸ்பீக்கர் கொண்டு வரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment