முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாமல் நேர்மையுடன் வாழ்பவர் என அவரது நூற்றான்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 13 துறைகளுக்கு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வி.வே.சுவாமிநாதனின் 100-வது வயதை முன்னிட்டு நூற்றாண்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், விஐடி கல்விக் குழுமங்களின் வேந்தருமான கோ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நூற்றாண்டு விழா குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலை வகித்தார். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வி.வே. சுவாமிநாதனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, “வி.வே. சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாதவர். அரசியலிலும், ஆட்சியிலும் இருந்தபோது பல்வேறு நெருக்கடிகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்டவர். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியில் இருந்தபோதும் நேர்மையுடன் செயல்பட்டார். சிதம்பரத்திற்கு அரசு கலைக் கல்லூரி மற்றும் புதைசாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளைக் கொண்டு வந்தவர். ஆட்சியில் இருந்தபோது குடும்ப நலனுக்காக சொத்துகளைச் சேர்க்காமல், சொந்த உழைப்பால் பிள்ளைகளைப் படித்து பட்டதாரிகளாக்கினார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என யாரும் கூற முடியாது. அதனால் தான் அவரை அனைவரும் மதிக்கின்றனர். வள்ளலார் கூறியது போல், அவர் மரணமில்லா வாழ்க்கையை வாழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என வாழ்த்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் அமைச்சர்கள் நல்லுசாமி, அருணாச்சலம், திமுக முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சந்திரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் சித்தார்த்தன், சிதம்பரம் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூ.சி இளங்கோவன் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் பார்த்திபன் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/15/kbalakri-2026-02-15-22-06-20.jpg)