கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த துயரச் சம்பவம் நடந்ததற்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தததும், தவெகவினர் கூட்டத்தை நெறிப்படுத்தவில்லை என்றும் காவல்துறை குற்றச்சாட்டு வைத்தனர்.
அதே சமயம், காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுக தலைமையிலான அரசு பழிவாங்குவதாகவும் தவெகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தள்ளனர். இப்படி காவல்துறை தரப்பும், தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பேற்க முடியாது என நடிகர் அஜித் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பேட்டி தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அஜித்குமாரின் முழு நேர்காணலை பார்த்தேன். பல ஆண்டுகளாக அவரை கவனித்து வருகிறேன். எப்போதும் இயல்பான, பணிவான, மனதில் பட்டதைப் பேசுகிற நேர்மையான மனிதராகவே தெரிகிறார்.
ரசிகர்களின் நடத்தை, ஊடகங்களின் அணுகுமுறை மற்றும் அதன் சமூக விளைவுகள், சமூகமாக நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை குறித்து அவர் பகிர்ந்த எண்ணங்கள் ஆழமானவை; அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவர் மீண்டும் மீண்டும் கூறியபடி, அவை சரியான மனப்பாங்குடன் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன். வசதியான வாழ்க்கையைத் தாண்டி,புதிய சாதனைகளை நிகழ்த்த தன்னை தயார்செய்துகொள்வது எளிதல்ல. வாழ்க்கை மற்றும் வெற்றி குறித்த அவருடைய ஆழமான புரிதல்மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய கார் ரேசிங் பயணம் வெற்றியடைய நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us