'மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் கொடூரக் காவலர்களை ஏவியவர்களை சிபிஐ தயக்கமின்றி கைது செய்ய வேண்டும்' என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் மீதான நகைத்திருட்டு புகார் பொய்யானது என்றும், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி அஜித் குமாரை காவல்துறை உயரதிகாரி ஆணைப்படி காவலர்கள் அடித்துக் கொலை செய்திருப்பதாகவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ கூறியிருக்கும் நிலையில், தமது மகன் மீது பொய்ப்புகார் அளித்தவர்களும், அவரது படுகொலைக்கு காரணமானவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்று அஜித் குமார் தாயார் வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கை மிகவும் நியாயமானது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மீது அந்தக் கோயிலுக்கு வந்த நிதிதா என்பவர் கொடுத்த நகைத்திருட்டு புகாரின் அடிப்படையில், அஜித்குமாரை கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி கைது செய்த தனிப்படைக் காவலர்கள் 5 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்த கொடூரத்தை தமிழகம் இன்னும் மறந்து விடவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் அஜித்குமார் அப்பாவி என்பதும், நிதிதாவுக்காக உயர் அதிகாரத்தில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெளிவாகியுள்ளது.
அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக பெண் இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த காவல்துறை உயரதிகாரி மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்திற்கு பிறப்பித்தக் கட்டளைகளின் அடிப்படையில் தான் அஜித் குமார் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அஜித்குமார் அப்பாவி என்பது உறுதியாகி விட்ட நிலையில், அவர் மீது பொய்யான புகார் கொடுத்த நிகிதா கைது செய்யப்படுவதும், அவருக்காக காவலர்களை ஏவிய உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதும் தான் நீதியாகும்.
அஜித் குமார் கொலையை பொறுத்தவரை அவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் வெறும் அம்புகள் தான். அம்புகளை மட்டும் தண்டித்து விட்டு, அவர்களை ஏவியவர்களை தப்ப விடுவது நியாயமாக இருக்காது. எனவே, அஜித் குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நிகிதா மற்றும் அதிகாரம் மிக்க உயர்பதவிகளில் இருப்பவர்களையும் சிபிஐ தயக்கமின்றி கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்துடன், கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/085-2026-02-05-21-54-15.jpg)