கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வழக்கு இன்று (09.01.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அதேசமயம் தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். அதோடு இந்த விசாரணைக்கு அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதாவது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “இது தொடர்பாகப் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?.
அன்றைக்கு 144 தடை உத்தரவு எதற்காகப் பிறப்பிக்கப்பட்டது?. தீபத் தூண் உள்ள இடம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்குக் கோவில் நிர்வாக அதிகாரிக்குச் சந்தேகம் இருக்கிறதா?. கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்கா சார்பில் சந்தன சந்தனக்கூடு கொடியேற்று விழா நடந்தது ஏன்?. அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் கோவில் நிர்வாக அதிகாரி தரப்பில் அளித்த பதிலில், “இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
Follow Us