விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் ரோசணை பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன், நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் நகர மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரால் அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு 28 அன்று, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, தனது வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோப்பு எடுத்து வருமாறு முனியப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால், முனியப்பன் தகுந்த பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரம்யா ராஜா, முனியப்பனை ஒருமையில் திட்டியதாகவும், அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பதிலளித்ததாகவும் கூறி, நகர மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் புகார் செய்தார்.
அதன் பின் நகராட்சி ஆணையர் அறைக்கு தன் துணை ஆட்களுடன் சென்ற நகர மன்ற தலைவரின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன், முனியப்பனை மிரட்டும் தோனியில் அழைத்து ‘ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு போ’ என கூறியுள்ளார். நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன் திடீரென மன்னித்து விடுங்கள் என கதறி படியே இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த திமுக, அதிமுக, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர மன்ற உறுப்பினர்கள், முனியப்பனை அவமதித்ததாக ரம்யா ராஜா மற்றும் ரவிச்சந்திரன் மீது குற்றம்சாட்டினர். மேலும், ஆணையர் இல்லாத நேரத்தில் அவரது அறையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக, நகராட்சி அலுவலகத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
விசாரணையில், ரவிச்சந்திரன் முனியப்பனை மிரட்டி மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதையும், முனியப்பன் கதறியபடி ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதையும் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ரம்யா ராஜா மற்றும் ரவிச்சந்திரன் மீது பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், இச்சம்பவத்திற்கு ஆதரவளித்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து, கோஷங்களை எழுப்பினர்.