சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தெடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடற்கரையில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கடற்கரையை ஆய்வு செய்வதாகத் தெரிவித்திருந்தனர். 

Advertisment

அதன்படி நீதிபதிகள் மெரினா கடற்கரையை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (02.01.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உலகிலேயே 2வது நீளமான கடற்கரை மெரினா கடற்கரை ஆகும். இந்த கடற்கரையின் ஒரு பகுதி நீலக்கொடி சான்று வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு நீலக்கொடி சான்று வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தலைவர்களின் நினைவிடங்களுக்கு பின்புறம் உள்ள பகுதிகளையும் நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிக்க வேண்டும். 

Advertisment

எனவே நீலக்கொடி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் யாரும், எந்த விதமான கடைகளையும் அமைக்கக்கூடாது. உழைப்பாளர் சிலைக்குப் பின்னால்  ஏராளமான நிரந்தரக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் உணவுப்பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் போன்ற கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளை அகற்ற வேண்டும். உலகில் எந்த ஒரு கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. இந்த ஏராளமான கடைகளால் கடற்கரையின் அழகை ரசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

judgement

கடற்கரை என்பது ரசிப்பதற்குத் தான். அது ஷாப்பிங் மால் அல்ல. மெரினா கடற்கரையில் தற்போது 1417 கடைகள் உள்ளன. இந்தத் திட்டத்தினை மறு ஆய்வு செய்து முறையான நடவடிக்கையின் மூலம் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரையை ரசிப்பதற்கு, கடைகள் இடையூறாக இல்லை என்பதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு (08.01.2026) நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Advertisment