தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரியும், சிபிஐ விசாரணை கோரியும், சில இழப்பீடு வழங்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், கதிரேசன், தங்கம் உள்ளிட்ட ஏழு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (03-10-25) நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிமணி ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘பகல் 12 மணிக்கு பரப்புரைக்கு வரவேண்டிய விஜய், இரவு 7 மணிக்கு வந்தார். நீரிழப்புக்கு ஆளானவர்கள் சோர்ந்திருந்த நேரத்தில் நெரிசல் ஏற்பட்ட போது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று வாதிட்டப்பட்டது.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அனுமதி தந்த இடம் மாநில நெடுஞ்சாலையா? தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அனுமதி தந்தீர்கள்?’ என்று கேள்விக்கு ‘தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல, சாலையின் வடக்கு உள்ள பகுதியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விஜய் வடப்பக்கம் வராமல் இட பக்கமே நின்று பிரச்சாரம் செய்தார். ’ என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், ‘குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்தித் தரப்படுவது அவசியம். பொதுமக்களின் நலனே பிரதானமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், அரசின் பாதுகாப்பு முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது அரசின் கடமை’ என்று கூறினர்.
இரண்டாவது வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதிகள், ‘மாநில, தேசிய நெடுஞ்சாலைகளிலோ, அதற்கு அருகிலோ கூட்டம் நடத்துவதற்கு எந்த அனுமதியும் இல்லையே. பிறகு ஏன், அனுமதி கொடுக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ‘மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் அருகே எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி இல்லை’ என்று கூறினர். தொடர்ந்து நீதிபதிகள், ‘பொதுக்கூட்டம் தவிர்த்து எந்த கூட்டமாகினும், மாநில தேசிய நெடுஞ்சாலைகள் அருகே நடத்தப்படக் கூடாது. பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை போன்ற அடிப்படை தேவைகளை செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கடுமையாக உத்தரவிட்டனர். மேலும், இழப்பீடு கோரிய வழக்குகளில் விஜய் மற்றும் அரசு தரப்பில் 2 வாரங்களில் உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து அரசு தரப்பில், ‘பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கூட்டத்துக்கும் அனுமதி இல்லை. ஏற்கெனவே அனுமதி கோரிய கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்’ என்று உறுதியளித்தன.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை நீதிபதிகள் எடுத்துக் கொண்டனர். அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் பாதிக்கப்பட்டவரா? அப்படி வழக்கு தாக்கல் செய்திருந்தால் சிபிஐக்கு உத்தரவிடலாம். விசாரணையில் திருப்தி இல்லையென்றால் விசாரணையை மாற்றக் கோரலாம். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை தொடக்க நிலையில் தான் இருக்கிறது. இப்படி இருக்க விசாரணையை எப்படி மாற்ற முடியும்? மாற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?’ என்று மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மேலும், ‘கரூர் சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். வழக்கு தொடக்க நிலையில் இருப்பதால் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை எண்ணிப் பாருங்கள்’ என நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.