தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்தது. அதில், கூட்டத்திற்கு வரும் மக்களை பொறுத்து காப்புத்தொகை அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு கூட்டம் நடத்த வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கூட்டத்தினரின் பாதுகாப்பு ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஆவார்கள் என்றும், பொது மற்றும் தனியார் சொத்திற்குச் சேதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்திருந்தது. இந்த நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று (26-02-26) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில் வாதிட்டதாவது, பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி என்பது தன்னிச்சையானது என்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது என்றும் நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் கட்சிகள் மீது திணிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது? கரூரில் நடைபெற்ற அந்த வேதனைக்குரிய சம்பவத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகிறது. அவை தேர்தலில் போட்டியிடுவதில்லை. பல தேர்தலில் போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏக்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் என்ன தவறு உள்ளது? தவெக இதுவரைக்கும் எத்தனை தேர்தலில் போட்டியிட்டுள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.
இதனிடையே தமிழக அரசு சார்பில், ‘ஒரே நாளில் ஒரே இடத்தில் பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லையெனில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த அரசியல் நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட நிலையில் தவெக மட்டுமே இது போன்ற வழக்கை தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர்’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தவெக தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/tvkhc-2026-02-26-16-43-25.jpg)