கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 3ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று (15-12-25) நடந்த விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, சிக்கந்தர் தர்கா தரப்பு மேலும் சில தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கூறி மாவட்ட ஆட்சியர், கோயில் செயலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று (16-12-25) விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, இந்த விவகாரத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய கோரி வழக்கறிஞர் அருணாச்சலம் என்பவர் நீதிபதிகளிடம் இன்று முறையிட்டுள்ளார். அப்போது இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர். ஆனால், நீதிபதிகள் கூறியதை வழக்கறிஞர் அருணாச்சலம் ஏற்க மறுத்துள்ளார்.
அப்போது, ‘திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு தீவிரமான ஒன்று. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போதுமான அளவில் இடையீட்டு மனுத் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி அதுவும் நிறைவு பெற்றுவிட்டது. நீதிமன்றத்தில் குரலை உயர்த்தி வாக்குவாதம் செய்யக் கூடாது’ என்று வழக்கறிஞர் அருணாச்சலாத்தை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டனர். மேலும், அவர் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் போது இனிமேல் யாரும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/maduraithiru-2025-12-16-12-05-50.jpg)