காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள 2ம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான ராமசாமி. இவர் ஓமன் நாட்டில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் சுரபிஸ்ரீ, ஆறு மாத கைக்குழந்தையான குணஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில், கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தேன்மொழி தனது குழந்தைகளுடன் தாய் வசந்தாவுடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களுடைய வீட்டில் 28 வயதான சத்யா என்பவர் வேலைக்கார பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். வசந்தா குடும்பத்தாரிடம் நல்லவராக நடித்துவந்த சத்யா, வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதற்காக தனது கூட்டாளிகளான 55 வயதான ஜெயக்குமார், 50 வயதான தவுலத் பேகம் ஆகியோருடன் இணைந்து சதி திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 2016 ஏப்ரல் 19ம் தேதியன்று ஆசிரியர் தேன்மொழி வழக்கம்போல் பள்ளி சென்றுள்ளார். அப்போது, அவரது தாய் வசந்தா மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த நிலையில்.. சத்யா தனது கூட்டாளிகளான ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகியோரை அழைத்து வந்து.. வசந்தாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு, தனது திட்டத்தை விரிவுப்படுத்திய சத்யா.. பள்ளியில் இருந்த தேன்மொழியை உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். தேன்மொழி உள்ளே வந்ததும் அவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை எடுத்துகொண்டனர். அந்த நேரத்தில், 6 வயது குழந்தை சுரபிஸ்ரீ.. இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அலறித் துடித்துள்ளார். அவரை உயிரோடு விட்டால் பிரச்சனை என முடிவெடுத்த சத்யாவும் அவரது கூட்டாளிகளும் சுரபிஸ்ரீயை கழுத்தை அறுத்துவிட்டு தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த சுரபிஸ்ரீ, எதிர் வீட்டில் உள்ள கன்னியப்பன் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதன்பிறகு, கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன் நீட்சியாக, போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொடூர குற்றவாளிகள் சத்யா, ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தையே உலுக்கிய இந்த வழக்கு.. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி.. இதில் குற்றம்சாட்டப்பட்ட சத்யா, ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அதன்பிறகு, பின்னர் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனையும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இத்தகைய கொடூரர்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/4-2025-11-21-18-10-18.jpg)