செல்லப்பிராணிகளுக்காக சண்டையிட்ட இரண்டு அண்டை வீட்டாரிடம், அரசாங்கத்தால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் ‘மோர் மற்றும் பீட்சாக்களை’ பரிமாற்ற வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
செல்லப்பிராணிகளை கையாள்வது தொடர்பாக அண்டை வீட்டுக்காரர்களான அரவிந்த் குமார் மற்றும் பிரதாம் விஷ்னோய் ஆகியோர் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த சண்டை ஒருகட்டத்தில் மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில், ஒரு சமரசத்தின் மூலம் இருவரும் இந்த விஷயத்தை சுமுகமாக தீர்த்துவிட்டனர்.
அதன்படி தாங்கள் சமரசம் அடைந்துவிட்டதாகவும் அதனால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அருண் மோங்கா அமர்வு முன்பு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண், நீதிமன்றத்தின் நேரத்தை இதுபோன்ற வழக்குகளால் வீணடித்துவிட்டதாகக் கூறி இருவருக்கும் வினோத உத்தரவை பிறப்பித்தார். அதில் நீதிபதி அருண் தெரிவித்துள்ளதாவது, ‘இந்த சண்டை ஒரு தனிப்பட்ட விஷயம். ஒருவருக்கொருவர் எதிரான குற்றவியல் வழக்குகள் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்கும் உதவாது. புகார்தாரர்களில் ஒருவர் பீட்சாக்களை சுட்டு விற்பனை செய்கிறார்.
அதனால், டெல்லியின் ஜிடிபி (GTB) மருத்துவமனைக்கு அருகில் அரசாங்கத்தால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனமான சன்ஸ்கர் ஆசிரமத்தில், இருவரும் ‘அமுல் மோர் மற்றும் காய்கறி பீட்சாக்களை’ பரிமாற வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும், ஆசிரமத்தின் உதவியாளர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் மோருடன் ஒரு பீட்சா வழங்க வேண்டும். இது புகார்தாரர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இணைந்து செய்யும் சமூக சேவையாகக் கருதப்படும். இப்படி செய்தால் இந்த வழக்குகளை போலீஸ் தள்ளுபடி செய்யும்’ என்று உத்தரவிட்டு இரு தரப்பினரும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு வழக்கின் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.