Judge G.R. Swaminathan's opinion By my order, you are blessed at thiruparankundram issue
கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் உத்தரவிட்டடிருந்தார். ஆனால், கார்த்திகை தீபத் திருநாளான நேற்று (03.12.2025) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபத்தை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்தனர். இதனால், இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று மாலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று (04-12-25) மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழகம் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும். அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மேல்முறையீட்டுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதனால், சட்டப்படி நோட்டீஸ் வழங்கி 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம்” என்று கூறினார். அதற்கு அரசு தரப்பு, ‘உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கூறியதை அடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுவது தவறு. எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பில்லை. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 4 வாரம் அவகாசம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?. நேற்று விசாரணைக்கு கோயில் தரப்பு வழக்கறிஞர் ஏன் வரவில்லை?. இதுதான் நீதிமன்றத்திற்கு தரும் மரியாதையா?. நீதிபதிகளிடம் ரெளத்திரம் பழக வேண்டாம். நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் யார் ஆஜராகி உள்ளீர்கள்?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை, இருவரும் உடனடியாக ஆஜராக வேண்டும். மேலும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாக அதிகாரியும் உடனடியாக ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இன்று (04.12.2025) வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us