திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் கடந்த 5ஆம் தேதி (05.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை (4ஆம் தேதி பிறப்பிக்கப்ப்ட்ட) நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
அதே சமயம் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “ஒரு விவகாரத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. சி.எஸ்.ஐ.எப். (CISF) படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம் நீதிமன்ற உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (09.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “தீபம் ஏற்றும் 4 நாட்கள் நிறைவடைந்துவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “இது தீபம் ஏற்றும் வழக்கு மட்டுமல்ல. சொத்துரிமை சார்ந்ததும் கூட ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us