மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள கம்பர் கோட்டத்தில், தேரழந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது குத்துவிளக்கு ஏற்றப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி தீபம் ஏற்ற ஆனந்தமாக சென்றேன். ஆனால், அங்கிருந்தவர்கள்‘குத்தி விளக்கை நீங்கள் ஏற்றக் கூடாது’ என்று சொல்லிவிட்டார்கள். அதனால் ரொம்ப ஏமாற்றமாக போய்விட்டது. எனக்கும் தீபத்துக்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. தீபம் ஏற்றும் நாள் வரும் என உறுதியாக நம்புகிறேன்” எனச் சிரித்துக் கொண்டே கூறினார். (விழா ஏற்பாட்டின்படி அங்கிருந்த பெண்கள் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது)
முன்னதாக கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவை பின்பற்றாமல் கோயில் நிர்வாகம் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது. இதனால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு புறம் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு செல்லாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/28/gr-swaminathan-kambar-2025-12-28-23-40-43.jpg)