கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

Advertisment

நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் ஈடுபட்டனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.

Advertisment

இந்த சூழ்நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று மாலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று (04-12-25) மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, “நீதிபதிகளிடம் ரெளத்திரம் பழக வேண்டாம். நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் யார் ஆஜராகி உள்ளீர்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும்.மேலும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாக அதிகாரியும் உடனடியாக ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது காவல் ஆணையர் லோகநாதன் விளக்கமளித்ததாவது, ‘ 3 மணியில் இருந்து கூட்டம் கூட தொடங்கிவிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க 5:30 மணிக்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பினேன். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டே ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்’ என்று கூறினார். இதையடுத்து அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘ நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டது. தீபம் ஏற்றலாம் கோஷம் போடலாம் ஆனால் காவல்துறையினரை தாக்கலாமா?’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “எனது உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலைக்கு தீபம் ஏற்ற சென்றவர்களை காவல் ஆணையர் தடுத்தார். மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்” என்று கூறி மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இன்று திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இன்று (04.12.2025) வந்தது.  இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.