Judge angry in Ajith Kumar case Photograph: (police)
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்பவர் மீது கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் நகை திருடியதாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின்போது போலீசார் அவரை கொடூரமாக தாக்கியதில் அடுத்த நாளான ஜூன் 29ஆம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (04/02/2026) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் 'நிகழ்ந்தது காவல் மரணம் என்றும், நிகிதா கொடுத்த நகைத் திருட்டு புகார் முற்றிலும் பொய் என்றும்' சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் கருத்துக்களை பொறுத்தவரை, ''ஒன்றுமே இல்லாத ஒரு வழக்கில் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். பொய் புகார் கொடுத்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற போலீசாருக்கு படம் புகட்டியே ஆக வேண்டும். காவல்துறையின் செயலை பார்த்தால் மனசு பதறுகிறது. யாராக இருந்தாலும் இந்த வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும்'' என நீதிபதி ஸ்ரீமதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நிகிதா கொடுத்த பொய் புகார் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ கொடுத்த உத்திரவாதத்தை அடுத்து இந்த வழக்கு பிப்.17 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us