நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளில் வலியுறுத்தி வருகின்றனர். இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பேசினர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் மக்கள் பிரச்சனை குறித்து முழக்கமிடும் போது துணை ராணுவப் படையான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுத்து நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து மாநிலங்களவை துணைத் தலைவருக்கு கடிதமும் எழுதினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (05-08-25) மாநிலங்களவையில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்களை ஈடுபடுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவை துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண், “எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நாடாளுமன்ற பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது புதிய நடைமுறை அல்ல” எனக் கூறினார். உடனடியாக எழுந்த மல்லிகார்ஜுன கார்கே, “நமது முந்தைய தலைவர்கள் கூட இடையூறுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறி வந்தனர். ஆனால் இன்று நான் உங்களிடம் கேட்கிறேன், இந்த அவையை யார் நடத்துகிறார்கள், நீங்களா அல்லது அமித் ஷாவா?” என்று மாநிலங்களவை துணைத் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “சிஐஎஸ்எஃப் வீரர்கள் எதற்கு சபைக்கு அழைக்கப்பட்டார்கள்? மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்களான நாங்கள் பயங்கரவாதிகளா?” என்று ஆவேசமாகப் பேசினார்.
இதனையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது ஜனநாயக விரோதமானது என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நான் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது என் அருகில் வந்து கோஷங்களை எழுப்பினால், அது ஜனநாயகம் அல்ல. இது செயல்பட சரியான வழி அல்ல. நான் நீண்ட காலமாக எதிர்க்கட்சியில் இருக்கிறேன், நான் சொல்கிறேன் எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பது குறித்து என்னிடம் பயிற்சி பெறுங்கள். ஏனென்றால் நீங்கள் அடுத்த 40 ஆண்டுகளுக்கு அங்கே இருப்பீர்கள். அவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி, பேச உரிமை உள்ள ஆளும் கட்சி உறுப்பினரைத் தொந்தரவு செய்யத் தொடங்கும் தருணத்தில், ஜனநாயகம் குறித்த அவர்களின் யோசனை முடிவுக்கு வருகிறது. இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அராஜகத்தை உருவாக்கும் முயற்சியாகும்” என்று கூறினார்.