நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.  அதில் அவர் பேசியதாவது, “மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாகக் கூறனார். அது அழிக்கப்பட்டதென்றால், பஹல்காம் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ள பல விஷயங்களை நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி தனது திட்டமிடப்பட்ட ஜம்மு-காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். இதுவும் நான் முன்பே எழுப்பிய ஒரு பிரச்சினை, எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு சந்தேகித்ததா? அப்படியானால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் செல்வதை ஏன் தடுக்கவில்லை?.

மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் நானும் பிரதமருக்கு கடிதம் எழுதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கோரினோம், ஆனால் அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. எங்கள் கடிதங்கள் குப்பைப் பெட்டியில் கொட்டப்படுகின்றன. பிரதமர் மோடியிடம் மிகுந்த ஆணவம் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கூட அவருக்கு இல்லை. அவர்கள் அதைப் படிப்பது கூட இல்லை. இந்த அதிக ஆணவம் நல்லதல்ல. உங்களுக்கு இவ்வளவு ஆணவம் இருந்தால், ஒரு நாள், உங்கள் ஆணவத்தை கிழித்து எறியும் நபர்கள் வருவார்கள். ஓரிரு வாக்கியங்களை எழுதி பதில் சொல்ல உங்களுக்கு நேரமில்லையா?. பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பஹல்காமில் மட்டும் ஐந்து தாக்குதல்கள் நடந்துள்ளன. தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் அவற்றை சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள்? உள்துறை அமைச்சர் பொறுப்பானவர் என்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பொறுப்பேற்கவில்லை என்றால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார். 

அதனை தொடர்ந்து எழுந்து பேசிய மத்திய அமைச்சரும் மாநிலங்களவையின் அவைத் தலைவருமான ஜே.பி.நட்டா, “எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மிகவும் மூத்த தலைவர். ஆனால் அவர் பிரதமரைப் பற்றி கருத்து தெரிவித்த விதத்தில் இருந்து அவரது வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரதமர் மோடி 11 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறார். அவர் உலகின் மிகவும் பிரபலமான தலைவர். ஆனால், உங்கள் கட்சி மீது நீங்கள் மிகுந்த அன்பு கொண்டுள்ளதால் உங்கள் மனநிலையை இழந்து நீங்கள் மிகவும் வேதனையில் இருக்கிறீர்கள்” எனப் பேசினார். ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இதையடுத்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்த அவையில் நான் மிகுந்த மரியாதை செலுத்தும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். நட்டா அவர்களில் ஒருவர். ராஜ்நாத் சிங்கும், அவரும் சமநிலையை இழக்காமல் பேசும் அமைச்சர்கள். அவர் இன்று என்னிடம் கூறுகிறார். இது அவமானகரமான விஷயம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் இதை சும்மா விடப் போவதில்லை” என ஆவேசமாகப் பேசினார். அதனை தொடர்ந்து எழுந்த ஜே.பி.நட்டா, “நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரை மதிக்கிறோம். நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நீங்களும் உணர்ச்சிகளால் வழிதவறிச் செல்லப்பட்டீர்கள். பிரதமரின் கண்ணியத்தைக் கூட நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு வழிதவறிச் சென்றீர்கள். அது வருத்தமளிக்கிறது” என்று கூறி அமர்ந்தார்.