சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்தும் பரபரப்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் போன்றவை ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. நீண்ட காலமாக, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், சமீபத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் மற்றும் சில நிர்வாகிகளின் பேச்சுக்கள், இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருவதாகக் கருத்துகள் நிலவுகின்றன.
குறிப்பாகக் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது எனத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்குக் காங்கிரஸ் தலைமை கராராகக் கூறியதாகத் தகவல் வெளியானது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சனையில் ஏற்படாது என்று கருதப்பட்டது.
இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டியிருந்தார். இத்தகைய சூழலில் தான் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நேற்று (25.01.2026) திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரைத் தான் சொல்கிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெற்றலாம் தலைமை புரிந்து கொண்டு அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணியை நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி, எம்.எல்.ஏ.கோ. தளபதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?. காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது” எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Follow Us