Jothimani MP said Vijay came to join the Congress party in 2010
சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் படுதோல்வியால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸுக்கு திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பலவீனப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (18-11-25) கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோதிமணியிடம், ராகுல் காந்தியும் விஜய்யும் கூட்டணி தொடர்பாக பேசியதாகக் கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோதிமணி, “விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. அவர் 2010யிலேயே ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணையவதற்கான வாய்ப்பு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். ஆனால், அப்போது பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. அதனால் அவர் எங்களுக்கு தெரியாதவர் அல்ல.
அதே போல், துயர சம்பவங்கள் நடக்கும் போது தலைவர்கள் பேசுவார்கள் தான். அதையே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்று நாம் சொல்லிவிட முடியாது. அதனால், திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். ரொம்ப காலமாகவே இந்த கூட்டணி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. கூட்டணி பற்றி பேச காலம் அவகாசம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வருவதை வைத்து அரசியல் கட்சிகளின் முடிவு என்று கூற முடியாது” என்று கூறினார்.
Follow Us