பா.ஜ.கவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisment

திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக பா.ஜ.க சார்பில் கடந்த 10ஆம் தேதி கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கரூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஜோதிமணி, கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர் அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்டத் தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன் ஜாமீன் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.

பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களைப் பாதுகாப்பதா? அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment