பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இதனால், பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள், தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை அறிவித்து அறிவித்து வருகின்றன. எதிர்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தாமதம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (20-10-25) நிறைவுபெறுவதை அடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. கடந்த 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/21/hemantsoren-2025-10-21-08-08-05.jpg)
தொகுதி பங்கீடு செய்வதில் மகாகத்பந்தன் கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சுதீப் குமார் சோனு தெரிவிக்கையில், “ஆழ்ந்த வருத்தத்துடன், இந்த முறை பீகார் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று ஜே.எம்.எம் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான கூட்டாளி போட்டியிடுவதைத் தடுத்திருந்தால், அதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த நிலைமைக்கு ஆர்ஜேடி தலைமையே முழுப் பொறுப்பேற்க வேண்டும். தொகுதி பங்கீடு விவாதங்களில் ஜேஎம்எம் சேர்க்கப்படுவதை உறுதி செய்யத் தவறியதற்கு காங்கிரஸும் பொறுப்பேற்கிறது.
பீகாரில் பழங்குடியின வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 28 இடங்களைப் பற்றி தேஜஸ்வி யாதவிடம் நாங்கள் கூறினோம். அவற்றில் 22 இடங்கள் குறுகிய வித்தியாசத்தில் இழந்தன. பழங்குடியின வாக்குகளை இந்தியா கூட்டணிக்கு திருப்பி, இடங்களை மாற்ற உதவும் திறனை ஜேஎம்எம் கொண்டிருந்தது. பீகாரில் தீவிர பிரச்சாரத்தில் ஜேஎம்எம் பங்கேற்காது. அங்கு அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடாது. இந்த துரோகம் ஜார்க்கண்டில் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். ஜார்க்கண்டின் உணர்வு அவமானத்தை மறக்காது. ஜே.எம்.எம் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் வலுவான குரல் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துவோம். மேலும் இந்தியா/மகாத்பந்தன் கூட்டணிகளுடனான அதன் உறவை அவர்களின் செயல்களின் அடிப்படையில் கட்சி மறுபரிசீலனை செய்யும் . ஜே.எம்.எம் இன் அரசியல் நலன்கள் மற்றும் ஜார்க்கண்டின் நலனுடன் ஒத்துப்போகும் முடிவுகளை எடுக்கும். கூட்டணி தர்மத்தை நிலைநிறுத்த ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் இரண்டும் தவறிவிட்டது. ஜே.எம்.எம் கடந்த தேர்தல்களில் தங்கள் கூட்டாளிகளுக்கு உதவுவதற்காக எங்கள் இடங்களை மாற்றிக் கொண்டு சமரசம் செய்து வந்தாலும், பீகாரில் நடப்பது அவமரியாதை மற்றும் சில தீவிர அரசியல் தவறான நடத்தை போல் உணர்கிறது” என்று கூறினார்.