யூதர்கள் கொண்டாடக்கூடிய ஹானுக்கா என்ற பண்டிகையின் கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதனையொட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் இதற்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

Advertisment

அதே சமயம் இந்த கொடூர சம்பவம் நடந்த இடம் முழுவதுமாக நியூ சவுத் வேல்ஸ் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருவர் மட்டும் தானா?. அல்லது மேலும் பலருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் இருக்கிறார்களா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரின் இல்லம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கும் ஏராளமான போலீசார் தீவிர சோதனையில் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிட்னி போலீஸ் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது. அந்த காட்சியில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரில் ஒருவரை அங்குள்ள இளைஞர் ஒருவர் அவரை தாக்கி, தாக்குதல் நடத்தியவரின் கைகளில் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை மீண்டும் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

siren-arrested

இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. 

Advertisment