நாமக்கல் மாவட்டம் மோகனூரில் காரில் வந்த ஒரு நபர் பெண்களிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவத்தில் போலீசார் விரட்டிப் பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள வலையப்பட்டி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபர் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நகையைப் பறித்த நபர் காரில் தப்பிச் செல்வதை அறிந்த நாமக்கல் போலீசார் உடனடியாக கரூர் மாவட்ட போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கரூர்-திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசாரை பார்த்த ஒரு நபர் காரை திருப்பிக்கொண்டு செல்ல முற்பட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட காரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் அவருடைய ஓட்டுநர் கோபி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட காரை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த நபரை வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.