திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு  முதற்கட்ட விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எஃப் ஐ ஆர் அடிப்படையில் கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குபதிவு செய்துள்ளது.

அதேநேரம் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஜெகன் மூர்த்திக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பே இல்லாத நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் அவரை காவல்துறையினர் சேர்த்துள்ளனர். போலீசார்  விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கி உள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அப்பொழுது காவல்துறை தரப்பில், 'ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்திற்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஜெகன்மூர்த்திக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது' என காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.

Advertisment

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்து, வழக்கின் தீர்ப்பு நேரத்தை தள்ளி வைத்துள்ளார்.