பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதே போல், மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும் முன்னிருத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர, தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதே போல், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பீகார் தேர்தல் களம் இப்படியாக சூடுபிடித்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களுடைய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ என மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது தற்போது பீகார் அரசியலில் பேசுபொருளாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 16 தலைவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி அவர்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கியது. அதில் கோபால்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ கோபால் மண்டே, முன்னாள் அமைச்சர் ஹிம்ராஜ் சிங், மகேஷ்வர் பிரசாத் யாதவ், பிரபாத் கிரண், முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஷியாம் பகதூர் சிங் உள்ளிட்ட 16 பேர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி அவர்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் போல் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் மூத்த தலைவர்கள் உள்பட 27 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சியின் சிந்தாந்தத்தை மீறியதற்காகவும் 2 எம்.எல்.ஏக்கள், 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட 27 தலைவர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் மங்கனி லால் மண்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்ஜேடி அல்லது மகாகத்பந்தன் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கண்டறிந்த பின்னர், தலைவர்கள் மீது ஆர்ஜேடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/28/jdurjd-2025-10-28-17-25-18.jpg)