தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இத்தகைய சூழலில் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “கடந்த 1998 இல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். இதனால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இவ்வாறு ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை ஆகும். சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிக்காட்டுதலால் ஜெயலலிதா இந்த வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார்” எனப் பேசியுள்ளார். கடம்பூர் ராஜுவின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு கடம்பூர் ராஜு விளக்கம் அளித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,''2026 இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் களத்தில் முதன்முதலாக களத்துக்கு வந்திருக்கிறது அதிமுக தான். எங்களை பொறுத்தவரை இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆரையும் சரி, எங்களை ஆளாக்கி அழகு பார்த்து, சாதாரண தொண்டனும் கோட்டைக்கு சென்று செல்ல வேண்டுமென்ற புதிய வரலாற்றை தமிழகத்தில் படைத்த ஜெயலலிதாவையும் சரி தெய்வமாகத்தான் பார்க்கிறோம்.
நாங்கள் மட்டுமல்ல அதிமுகவில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை அந்த உணர்வோடு தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மறையவில்லை எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் தெய்வமாக வழிபடுகின்றோம். அப்படிப்பட்ட நிலையில் நமது மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் அதில் எங்களுடைய பங்களிப்பு இருக்கும் என்று சொல்லி பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு என்னை அழைத்தார்கள். அந்த நேரத்தில் அங்கு நடைபெற்ற அந்த கூட்டத்தில், 'பாஜகவோடு 1998-ல் அதிமுக ஜெயலலிதா தலைமையில் மிகச் சரியான கூட்டணி அமைத்தது. அன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் தயங்கிய நேரத்தில் துணிச்சலுடன் ஜெயலலிதா முடிவெடுத்தார். அந்தக் கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றி தமிழகத்தில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றதன் அடிப்படையில்தான் முதன் முதலாக பாஜகவின் ஆட்சியை இந்திய திருநாட்டில் மலர்ந்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.
அதை பயன்படுத்தி 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் வந்த பிறகு பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் பலமான துறைகளை வாங்கிக் கொண்டு திமுகவினர் வளம் பெற்றார்கள். அவர்களுடைய கட்சியை வளமாக்கினார்களே தவிர, திமுக தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை'' என்றேன். இன்னும் அதை தாண்டி நான் என்ன கருத்து சொன்னேன் என்று சொன்னால் திமுக பாஜக உடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தீண்டத்தகாத கட்சியா என்ற கருத்தை மட்டும் தான் நான் சொன்னேன். இன்றைக்கு அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்து வரும் காரணத்தினால் ஏதாவது குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்து தவறுதலாக வெளியாகி வருகிறது. இது முற்றிலும் தவறானது'' என்றார்.